

தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து இருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகையான அனுபவம் குறித்து அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், எனக்கு எப்போதுமே நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இல்லை. எங்கள் வீட்டு அருகில் ஒரு ஆடிட்டோரியம் இருந்தது. அங்கே சிறிய குழந்தைகள் எல்லாம் சேர்ந்து ஜாலியாக நாடகங்கள் போடுவார்கள். அவற்றை பார்ப்பதற்காக நானும் அங்கு செல்வேன். கல்லூரிக்கு சென்ற பிறகு என் சினேகிதி எனது புகைப்படங்களை பிரேமம் படத்தின் நடிகை தேர்வுக்கு அனுப்பி வைத்தார். திடீரென்று அழைப்பு வந்தது. வீட்டில் சொன்னதும் பதறினார்கள். அவர்களை சமாதானம் செய்து விட்டு தேர்வுக்கு சென்றேன். டைரக்டருக்கு என் தோற்றம் பிடித்திருந்தது. ஆனால், வசனம் பேச தடுமாறினேன் வீட்டில் போய் பயிற்சி எடுக்க சொன்னார்கள். கண்ணாடி முன்னால் நின்று வாய்க்கு வந்ததெல்லாம் மணிக்கணக்கில் பைத்தியமாக பேசினேன். என் குடும்பத்தினர் பயந்தார்கள். மீண்டும் அதே பட கம்பெனிக்கு சென்று தடுமாறாமல் வசனம் பேசினேன். இதனால் பிரேமம் படத்துக்கு என்னை தேர்வு செய்தார்கள் என்றார்.