“நல்ல பாடல்கள் தேன்போல.. கெட்டுப் போவதில்லை”- கவிஞர் வைரமுத்து

கால் நூற்றாண்டு கழிந்தபின்னும் ரிதம் படப் பாடல்கள் கொண்டாடப்படுகின்றன என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
“நல்ல பாடல்கள் தேன்போல.. கெட்டுப் போவதில்லை”- கவிஞர் வைரமுத்து
Published on

சென்னை,

இயக்குநர் வசந்தின் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியான படம் 'ரிதம்'. இந்த படத்தில் அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படம் இன்றைக்கும் மறக்க முடியாத படமாக உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடலுக்கும் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்த ரிதம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கால் நூற்றாண்டு

கழிந்தபின்னும்

ரிதம் படப் பாடல்கள்

கொண்டாடப்படுவதைப்

புன்னகையோடு பார்க்கிறேன்

இசை மொழிக்கு

அழகு தருகிறது

மொழியோ இசைக்கு

ஆயுள் தருகிறது

ஐந்து பாடல்களுக்கும்

ஐம்பூதங்களை

உள்ளடக்கமாக்கியவர்

இயக்குநர் வசந்த்;

நல்லிசை நல்கியவர்

ஏ.ஆர்.ரகுமான்

நதியே நதியே பாடலில்

"தண்ணீர்க் குடத்தில்

பிறக்கிறோம்

தண்ணீர்க் கரையில்

முடிக்கிறோம்" என்ற வரிகளைத்

தமிழன்பர்கள் இன்றும்

மந்திரம்போல் ஓதுகிறார்கள்

காற்றே

என் வாசல் வந்தாய் பாடலில்

"பூக்களுக்குள்ளே

தேனுள்ள வரையில்

காதலர் வாழ்க

பூமிக்குமேலே

வானுள்ள வரையில்

காதலும் வாழ்க" என்ற வரிகளை

இன்றைய இருபது வயதுகள்

இதழோடு இதழ்சேர்த்து

உச்சரிக்கின்றன

நல்ல பாடல்கள்

தேன்போல...

கெட்டுப் போவதில்லை

படம் மறந்துபோனாலும்

பாடல்கள் மறப்பதில்லை

காடழிந்து போனாலும்

விதையழிந்து போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com