சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன்.. 'காடுவெட்டி' இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடி

காடுவெட்டி படம் சாதி படம் இல்லை என்றும், இது உணர்வு சார்ந்த படம் என்றும் ஆர்.கே.சுரேஷ் பேசினார்.
சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன்.. 'காடுவெட்டி' இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடி
Published on

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் 'காடுவெட்டி'. மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம், ஜி.ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:-

என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தன. 15 வருடமாக சினிமாவில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?

வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்கிறேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே.

இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் மோகன் ஜி பேசும்போது, "இந்தப்படம் பல பிரச்சினைகளை சந்தித்து வெளிவர உள்ளது. திரெளபதி படத்தின் ரிலீசுக்காக நான் பட்ட கஷ்டம் அதிகம். அதேபோல் காடுவெட்டியும் பல பிரச்சினைகளையும் வழக்குகளையும் சந்தித்துள்ளது. பிரச்சினைகளை சந்தித்து ரிலீஸ் ஆகும் படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளன. அந்தவகையில் காடுவெட்டியும் மிகப்பெரிய ஹிட் ஆகும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com