

சென்னை
ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த திரைப்பட நடிகை ஓவியா நேற்று மாலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து அவராகவே வெளியேறினார் என கூறப்பட்டது. நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதன் பிறகு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி சென்றதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.
இது குறித்து பேட்டி அளித்த ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான், மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறி இருந்தார்.
இந்நிலையில் வெளியேற்றப்படுபவர்கள் லிஸ்டில் ஜூலி, வையாபுரி, ஓவியா ஆகியோர் இருப்பதாலும், அவர்களில் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது கமல் முன்னிலையில் இன்று ஷூட் செய்யப்பட இருக்கிறது. ''சில தினங்களாக ஓவியாவைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருவதால் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை பற்றி கமல் பேச இருக்கிறார்.
ஓவியாவின் உடல்நலம் பற்றியும் அவர் தெளிவுபடுத்த இருக்கிறார். அப்போது ஓவியா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால், இன்று நடைபெறும் ஷூட்டில் பங்கேற்பது அவசியம் என்பதால் நிகழ்ச்சி நிர்வாகிகள் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஓவியாவும் சம்மதிக்க தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார். உடல் நலத்தை கருத்தில்கொண்டு ஓவியா வெளியேற விரும்பினால், அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள் அந்த நிகழ்ச்சியின் நிர்வாகிகள்.