

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் வித்யாபாலன். இவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்து இருக்கிறார்கள். தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.
சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை வித்யாபாலன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்தேன். என்னை படங்களில் ஒப்பந்தம் செய்து விட்டு பிறகு என்னிடம் சொல்லாமலேயே நீக்கி விட்டு வேறு நடிகையை வைத்து படம் எடுத்தனர். ஆரம்ப நாட்களில் அப்படி 13 படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள்.
ஒரு தயாரிப்பாளர் என்னை தனது படத்தில் இருந்து நீக்கியதுடன் ஆறு மாதங்கள் என் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே தைரியம் இல்லாத அளவுக்கு அவமானப்படுத்தினார். இந்த சம்பவம் 2003- 2004 ஆண்டுகளுக்கு இடையே நடந்தது.
அப்போது நான் கே.பாலச்சந்தரின் இரண்டு மிகப்பெரிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டேன். ஆனால், எனக்கு தெரிவிக்காமலே அப்படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். நாங்கள் படப்பிடிப்புக்காக நியூசிலாந்துக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் என் பாஸ்போர்ட்டை கூட கேட்கவில்லை.
ஏதோ தவறு நடக்கிறது என தோன்றியதால் என் அம்மா பாலச்சந்தரின் மகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் என்னை அப்படத்தில் இருந்து நீக்கி விட்ட தகவலை தெரிவித்தார். அதைக்கேட்டு நான் வீட்டில் மணிக்கணக்காக அழுதுகொண்டே இருந்தேன். எல்லா வேதனைகளையும் தாண்டி தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்.