கே.ஜி.எப் நடிகர் யாஷின் கதை தெரியுமா...? ரூ.300 பணத்துடன் வீட்டை விட்டு ஓடி வந்தவர்

அவரது தந்தை ஒரு பேருந்து நடத்துனர், தாயார் ஒரு இல்லத்தரசி. சிறுவயதில் இருந்தே யாஷ் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக வேண்டும் என்று கனவு கண்டார்.
Image Source:Internet
Image Source:Internet
Published on

பெங்களூரு,

திரைத்துறையில் கோலோச்சும் பெரிய நட்சத்திர நடிகர்களில், சாதாரண நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் பல பேர்.அதற்கு நல்ல உதாரணமாக நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையை குறிப்பிடலாம்.

ஆனால் இப்போதைய நட்சத்திர நடிகராக வலம் வரும் கன்னட நடிகர் யாஷ், அதாவது கே.ஜி.எப் ராக்கி பாய் என்று சொன்னால் எளிதில் புரியும் அவர் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவோடு, வெறும் ரூ.300 பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்தவர் என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

சமீபத்தில் வெளியான கன்னட மொழி திரைப்படமான கேஜிஎப் அத்தியாயம் 2 வெளியான ஐந்தே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கி வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் கே.ஜி.எப்-2, நடிகர் யாஷின் பிரபலத்தை மேலும் உயர்த்த உதவியது.

'கேஜிஎப்-1' படத்தின் வெற்றியின் மூலம் நடிகர் யாஷ் முதன்முதலில் நட்சத்திர அந்தஸ்தை ருசித்தார்.

அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும், சினிமா துறையில் எந்த தொடர்பும் இல்லை.அப்படியிருந்தும் தன்னுடைய விடாமுயற்சியால் சினிமாவில் முக்கிய இடத்துக்கு உயர்ந்திருக்கிறார் யாஷ்.

யாஷ் என்ற மேடைப் பெயரால் அறியப்பட்டு வரும் அவருடைய நிஜப்பெயர், நவீன் குமார் கவுடா என்பதாகும்.

நவீன் குமார் கவுடா, எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ஒரு பேருந்து நடத்துனர். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. சிறுவயதில் இருந்தே யாஷ் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று கனவு கண்டார்.

எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடி, தனது கனவை எட்ட ஒரு வாய்ப்பைக் கொடுத்த யாஷ், தனது கனவை நிறைவேற்றுவதற்காக வெறும் 300 ரூபாயுடன் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் யாஷ் கூறும்போது, தன்னுடைய பள்ளிப்பருவத்தில் நடந்த நிகழ்வுகளை அவர் குறிப்பிடுகையில், வகுப்பில், நீ வளர்ந்து பெரியவனான பின் யாராக மாற விரும்புகிறாய் என்று கேட்டதற்கு, நான் சூப்பர் ஸ்டாராக இருப்பேன் என்று சொல்வேன்.

அதனால், எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு நாள், நான் பட ஹீரோவாகி விடுவேன் என்று நம்பினேன்.

அது எவ்வளவு கடினம். அதற்கு எவ்வளவு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. எனக்கு எந்த துப்பும் இல்லை. ஆனால் நடிகனாக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது என்றார்.

இருப்பினும் யாஷின் பெற்றோர்கள், தங்கள் மகனின் எட்டாத தூரத்தில் இருக்கும் கனவை நம்பவில்லை. யாஷ் கல்லூரிக்குச் சென்று பட்டப்படிப்பைப் படிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் விரும்பினர். ஆனால், அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி பெனகா என்ற நாடகக் குழுவில் சேர்ந்தார்.

அவர் வெளியேறும் போது அவருடைய பெற்றோர், சரி போ. ஆனால் நீங்கள் திரும்பி வந்தால், வேறு எதையும் நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

நான் அதற்கு சரி என்றேன். ஏதாவது செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறி சென்றேன். நான் விரைவில் வீட்டிற்கு திரும்பி வருவேன் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை என்றார் யாஷ்.

அதன்பின், யாஷ் தனது சொந்த ஊரான மைசூரில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அவர் முதலில் நாடகங்களின் பின்னணியில் பணிபுரிந்தார். பின்னர் 'துணை நடிகர்' ஆனார்.

நான் ஒரு துணை நடிகனானேன். சில நடிகர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது கிடைக்காவிட்டாலோ அவருடைய பங்கை நான் நடிப்பேன். அது அப்படித்தான் தொடங்கியது. பின்னர் எனக்கு பெரிய பாத்திரங்கள் கிடைக்க ஆரம்பித்தன என்றார்.

மேலும், இந்தி சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தால், தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாக நடிக்க விரும்புவதாக அவர் ஒரு பேட்டியில் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com