எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யார் எது சொன்னாலும் அது என்னை பாதிக்காது - நடிகர் ஜெயம் ரவி

சினிமாவை கடந்த தனிப்பட்ட விமர்சனங்கள் என்னை பாதிக்காது என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யார் எது சொன்னாலும் அது என்னை பாதிக்காது - நடிகர் ஜெயம் ரவி
Published on

சென்னை,

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான 'பிரதர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. 'பிரதர்' படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படமானது அக்கா தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. 'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குனர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் புரமோசன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 'பிரதர்' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

படம் தொடர்பான புரமோஷன்களில் ஈடுபட்டுள்ள ஜெயம் ரவி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எழும் விமர்சனங்கள் தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், "சினிமாவை பற்றி ஆயிரம் விஷயங்கள் சொல்லுங்கள். நான் நன்றாக நடிக்கவில்லை என்று சொல்லுங்கள், நன்றாக நடித்துள்ளேன் என்று சொல்லுங்கள். அந்த விருதுக்கு நான் தகுதி இல்லாதவன் என்று சொல்லுங்கள் அதை நான் கேட்டுக் கொள்வேன். சரி அடுத்த படத்தில் சிறப்பாக செய்வோம் என்று மாற்றிக் கொள்வேன். ஆனால், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு மட்டும் தான் தெரியும். என்ன நடக்கிறது என்பது நான் மட்டுமே அறிவேன். என்னை பொறுத்தவரை எனக்கு இருப்பது குறுகிய நண்பர்கள் வட்டம்.

அந்த வட்டத்தை தாண்டி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யார் எதை பேசினாலும் அது என்னை பாதிக்காது. அதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் என்னைப் பற்றி தெரிந்தவர்கள் மிக சிலர் தான். அவர்களுக்கு மட்டும் தான் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரியும். சினிமா என்று வரும்போது அது ஒரு பொதுதளம். அதில் நீங்கள் என்னை விமர்சிக்கலாம். அதை நான் காது கொடுத்துக் கேட்டுக் கொள்வேன். இப்படி நான் சினிமாவையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்து வைத்துள்ளேன். அதனால் மற்றவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது என்னை பாதிக்காது. தனிப்பட்ட விஷயங்களை நானே பார்த்துக் கொள்கிறேன். அதைப்பற்றி யாரும் பேச வேண்டாம்." என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com