

இந்தியாவில் மீ டூ இயக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பாலியல் தொல்லைகளை நடிகைகள் இதில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தி நடிகர் நானா படேகரின் பாலியல் தொல்லையை தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீதத்தா அம்பலப்படுத்தினார்.
நடிகை கங்கனா ரணாவத் குயின் பட இயக்குனர் மீது செக்ஸ் புகார் சொன்னார். பிரபல இயக்குனர் சஜீத்கான் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டு உள்ளது. இதனால் அவர் இயக்குவதாக இருந்த ஹவுஸ்புல்-4 படத்தில் இருந்து அக்ஷய்குமார் விலகி விட்டார். மீ டூ புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் கன்னட சினிமாவிலும் உரிமை மற்றும் சமத்துவத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பில் நடிகைகள் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் சேதன் குமார், நடிகைகள் பிரியங்கா உபேந்திரா, சுருதி ஹரிகரன், இயக்குனர் கவிதா லங்கேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
30-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் இந்த குழுவுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் கொடுத்து உள்ளனர். பாலியல் தொல்லைகள் குறித்தும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் குறித்தும் இந்த குழு விசாரிக்கும் என்று நடிகர் சேதன் குமார் கூறினார்.