

அம்மாவின் கவனத்தை பெற தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்ளக்கூடும். குழந்தைகள் ஒரு கண்ணாடிக் குடுவை போல. அவர்களை உடைத்து நொறுக்குவதும், நீர் நிரப்பி மீன் வளர்த்து மகிழ்வதும் நமது சாமர்த்தியம்.
இளைஞன் ஒருவன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து, சிறு வயதில் தான் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளை அசைபோடுவது போல தொடங்குகிறது மை ஸ்வீட் ஆரஞ்ச் ட்ரீ (My Sweet Orange Tree) திரைப்படம்.
பிரேசிலில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழும் ஏழை குடும்பம் தான், எட்டு வயது சிறுவன் ஸிஸ்ஸேவினுடையது. அவன் படு குறும்புக்காரன். மற்ற சிறுவர்களை காட்டிலும் கொஞ்சம் அதிகம் சுட்டி தான். தனது குடிகார தந்தையின் மீது வெறுப்பு கொள்கிறான். அவன் இயங்க நினைக்கும் உலகை, அவனது தாய் தந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் ஒரு சிறந்த கதை சொல்லி. தன் கற்பனையில் பல ஆச்சரியமூட்டும் கதைகளை உருவாக்குவான். ஆனால் அந்தக் கதைகளைக் கேட்க செவிகள் இல்லாததால் உடைந்து போகிறான்.
தேவாலயத்தில் ஏசுநாதர் முன் அமர்ந்து வேண்டும் காட்சியில் கிறிஸ்துமஸ் நாளில் தனது பிரியமான தம்பி லுயிஸூக்கு, நல்ல பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறான், ஸிஸ்ஸே. உலகில் அப்போது அவனுக்கு ரொம்பவே பிடித்த ஒருவன், அவனது தம்பி மட்டும் தான்.
ஸிஸ்ஸேவிற்கு ஒரு ஆரஞ்சு மரம் அறிமுகமாகிறது. அந்த மரத்திற்கு பிங்கி என்று பெயர் சூட்டுகிறான். அந்த மரத்திடம் பேசுவான்; கதைகள் சொல்வான். அவனுக்கு குதிரை சவாரி செய்யத்தோன்றும் போது, அம்மரத்தின் கிளையில் அமர்ந்து குதிரை சவாரி செய்வது போல கற்பனை செய்வான்.
அந்தக் கிராமத்தில் தனியாக தனது தோட்டத்து வீட்டில் வசித்து வரும் போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த முதியவர் மணாவல், சிறுவன் ஸிஸ்ஸேவுக்கு நல்ல நண்பனாக கிடைக்கிறார்.
மணாவலிடம் ஒரு முறை சிறுவன் ஸிஸ்ஸே இன்று நான் சாகப் போகிறேன். என்னை இந்த உலகத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. அப்பா.. அம்மா.. எல்லோரும் என்னை அடிக்கிறார்கள் என்கிறான்.
அவனது வார்த்தைகளை கேட்டு பயந்து போன மணாவல், அவனுக்கு குழந்தை மொழியிலேயே இப்படி எல்லாம் யோசிக்கக்கூடாது. வாழ்க்கையை தைரியமாக வாழவேண்டும் என அறிவுரை சொல்லி அனுப்புகிறார்.
ஆனாலும் அவனது வார்த்தைகள் அவரை உறங்கவிடவில்லை. மணாவல் அச்சிறுவனின் வீட்டு வாசலில் அந்த இரவு காவல் இருக்கிறார். காரணம் அவனது வீட்டின் முன் ரெயில் தண்டவாளம் உள்ளது.
சாகசப் பிரியரான மணாவல், ஆளில்லா ரெயில்வே கிராஸிங்கை ஒரு முறை தனது காரில் வேகமாக கடந்ததை ஸிஸ்ஸே பார்த்திருக்கிறான். அவனுக்கு அந்த காரின் பின்பக்கம் தொற்றிக் கொண்டு பயணிக்க வேண்டும் என ஆசை. அப்படி ஒருநாள் முயற்சித்தபோது, மணாவலிடம் அடி வாங்கியதில் தொடங்கியது தான் அவர்களின் உறவு.
சிறுவர்களுக்கு எதன் மீது நாயக பிம்பம் உருவாகிறதோ, அவர்கள் அதுவாகவே மாற முயற்சி செய்கிறார்கள். அவர்களது கற்பனை சற்று விபரீதமானாலும், அது அவர்களின் உயிரையே கூட பறித்துவிடும் அபாயம் உண்டு. அதனால் தான் குழந்தைகளுக்கு நாம் எதை அறிமுகம் செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.
ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படப்பிடிப்புக்கான களத்தேர்வு என எல்லாவற்றிலும் இயக்குனர் மார்க்கோஸ் பர்ன்ஸ்டியனின் குழு பெருங்கவனம் செலுத்தியிருக்கிறார்கள். பிரேசிலின் சிறந்த குழந்தைகள் திரைப் படத்துக்கான விருது, கோல்டன் ஸ்லிப்பர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளது மை ஸ்வீட் ஆரஞ்ச் ட்ரீ திரைப்படம்.