

எல்லா நாடுகளிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது தான். ஆனால் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் குழு என ஒன்று உண்டு இல்லையா? அதன் செயல் பாடுகள் என்ன? ஒரு அணியில் எந்த அடிப்படையில் ஒரு வீரர் சேர்க்கப்படு கிறார்? திறமை தான் உண்மையில் அளவீடாக பார்க்கப்படுகிறதா? என்ற கேள்விகளுக்கு, பொதுவான பதில் இல்லை என்பது தான்.
மனிதனை மனிதன் விலை பேசி விற்ற காலமெல்லாம் மலை ஏறி விட்டதாக நாம் நினைக்கலாம். அது சரிதான்... மறைமுகமாக விலைபேசி விற்ற காலம் மலை ஏறி விட்டது. ஆனால் இன்றும் மனிதர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். அதன் மூலம் அவர்கள் பகிரங்கமாக விற்கப்படு கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.
ஒரு கிரிக்கெட் வீரரை, இந்த நிறு வனமோ.. இந்த நடிகரோ.. இந்த விலைக்கு ஏலமெடுத்தார். இந்த வீரர் இத்தனை கோடிக்கு விலைபோனார் என்பதெல்லாம் வெறும் செய்தியாக கடந்து போக வேண்டிய விஷயம் அல்ல. இது விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் மனித வியாபாரம்.
இரண்டு எதிரி நாடுகள் மைதானத்தில் மோதிக் கொள்வதை, விளையாட்டாக அல்லாமல் யுத்தம் போல சித்தரிப்பதன் மூலம் ஆதாயம் பெறுவது, பன்னாட்டு நிறுவனங்களும்.. சூதாட்டத் தரகர்களும் தான் என்ற மறு பக்கத்து உண்மையையும் நாம் உணர வேண்டியது அவசியம்.
நாம் இன்று இங்கே பார்க்கப்போவதும் விளையாட்டு சம்பந்தப்பட்ட சினிமாவைத் தான். பேஸ்பால் விளையாட்டை மையப்படுத்தி 2013-ம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் 42.
1947-ல் அமெரிக்கர்களின் பிரியமான விளையாட்டான பேஸ்பால் ஆட்டத்தில், கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ப்ரூக்லின் டூக்கர்ஸ் என்ற பேஸ்பால் விளையாட்டு அமைப்பை, ரிக்கி என்ற முதியவர் நிர்வகித்து வருகிறார். அவர் ஒரு முன்னாள் பேஸ்பால் வீரர். அவர் இந்த விளையாட்டை சிலவேறு கோணங்களில் பார்க்கிறார். ஒன்று.. இதில் நிறவெறி கூடாது. மற்றொன்று இது அவரது பிரதான வணிகம்.