கரூர் கூட்ட நெரிசல் - திரைப்பிரபலங்கள் இரங்கல்


Karur stampede - Film celebrities express condolences
x
தினத்தந்தி 28 Sept 2025 8:00 AM IST (Updated: 28 Sept 2025 9:41 AM IST)
t-max-icont-min-icon

விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

''கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்'' - நடிகர் ரஜினிகாந்த்

''கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்'' - கமல்ஹாசன்

''விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மனதை வேதனைப்படுத்துகிறது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க. தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்'' - நடிகர் விஷால்

''கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம்'' - கார்த்தி

“கரூரில் ஏற்பட்ட துயரமான சம்பவம் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் இரங்கல்கள்!” - பிரபுதேவா

''தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கூட்டத்தில் கலந்து கொண்ட 7 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 40 பேருக்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியும் பெரும் வேதனையளிக்கிறது'' - சரத்குமார்

''என்று தனியும் இந்த சினிமா மோகம்?. உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழந்தைகள் பலியா?. கரூரில் இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள்?'' - இயக்குனர் அமீர்

''கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது. கண்ணீர் முட்டுகிறது'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்'' - இயக்குனர் மாரி செல்வராஜ்

''தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை. மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது. அந்த மரணங்களுக்கு முன்னும் பின்னுமான மனிதத் துயரங்கள் கற்பனையில் வந்து வந்து கலங்க வைக்கின்றன. பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா?. இந்த வகையில் இதுவே கடைசித் துயரமாக இருக்கட்டும். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்'' - கவிஞர் வைரமுத்து

1 More update

Next Story