மக்களவை தேர்தலில் தி.மு.க.வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் வடிவேலு?

நடிகர் வடிவேலுவுக்கு தி.மு.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தலில் தி.மு.க.வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் வடிவேலு?
Published on

சென்னை,

சமூக வலைதள உலகில் கடந்த 15 வருடங்களாக நடிகர் வடிவேலுதான் சூப்பர் ஸ்டார். படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் வடிவேலு இல்லாத இன்டர்நெட் தமிழகத்தில் கிடையாது. மீம் உலகில் இப்போதும் வடிவேலுதான் காமெடி கிங். நேசமணியில் தொடங்கி வண்டுமுருகன் வரை வடிவேலுவின் கதாபாத்திரங்கள்தான் இப்போதும் தமிழக மக்களை கவர்ந்து வருகின்றன. 2011ல் வடிவேலு தமிழக சினிமா உலகில் டாப்பில் இருந்தார். அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்தன. ஒரு படம் விடாமல் எல்லா படங்களிலும் வடிவேலுவின் காமெடி பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது திரை வாய்ப்புகள் குறைந்து போனதற்கு காரணம் அவர் தி.மு.க.வுக்கு ஆதரவாக கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் பிரசாரம் செய்ததுதான் என்று கூறப்படுகிறது. அப்போது நடிப்பு உலகில் உச்சத்தில் இருந்து வந்த வடிவேலுவை தி.மு.க. தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அழைத்தது. வடிவேலுவும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மேடைகளில் பிரசாரத்தை பலமாக மேற்கொண்டார். அதிலும் குறிப்பாக அப்போது விஜயகாந்துக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தார்.

ஆனால் அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவில்லை ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். அதனால் அவருக்கு பயந்து திரையுலகில் யாரும் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமும் அவர் பட வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்து வந்தார். அப்படி இருந்தும் ஒரு சில படங்களில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த படங்களும் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்தார் வடிவேலு.

இத்தனை நாட்கள் அரசியல் குறித்து பேசாமல் இருந்த நடிகர் வடிவேலு, தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் குறித்தும், தி.மு.க.மற்றும் கருணாநிதி குறித்தும் அதிகம் பேசத் தொடங்கியுள்ளார். அதிலும் 'மாமன்னன்' படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்த பிறகு தி.மு.க.வுடன் அவரது நெருக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சமாதிக்கு சில தினங்களுக்கு முன் சென்று சுற்றிப் பார்த்த அவர், இது சமாதி இல்லை சன்னதி என்றார்.

மேலும், தான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன் என்றும், ஆனால், கலைஞரின் தீவிர பக்தன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது தங்களால் பாதிக்கப்பட்ட வடிவேலுவுக்கு ஒரு வாய்ப்பு வழங்க தி.மு.க. முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலுவை தி.மு.க. சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்பது குறித்து அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வடிவேலுவுடனும் ஆலோசிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. நடிகர் வடிவேலு தி.மு.க.சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com