கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் -நடிகர் கமல்ஹாசன்

2வது நாளாக மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பிறகு கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #KamalhaasanPoliticalEntry
கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் -நடிகர் கமல்ஹாசன்
Published on

சென்னை,

நடிகர் கமல்ஹாசன், தனது சுற்றுப்பயணம் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்

பிப்ரவரி 21ந்தேதி புதிய கட்சி தொடங்கும் கமல்ஹாசன், 23ந்தேதி வரை முதல் கட்டமாக சுற்றுப் பயணம் செய்கிறார். இது தொடர்பாக முதலில் அவர் சுற்றுப்பயணம் செய்யும் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட கமல் நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

அப்போது பிப்ரவரி 21ந்தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் விரிவாக பேசினார்.

இதில் ரசிகர்கள் எவ்வாறு பங்கேற்க வேண்டும். தொடர்ந்து நடைபெறும் சுற்றுப்பயணத்தை எவ்வாறு கட்டுக்கோப்பாக நடத்த வேண்டும். இதில் மன்ற உறுப்பினர்கள் எப்படி பணிபுரிய வேண்டும் என்பது பற்றி கமல் எடுத்துக் கூறினார்.

ராமநாதபுரத்தில் பொதுக் கூட்டம் நடத்தவும் அதில் கமலின் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிப்ரவரி 21ந்தேதி முதல் 23ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் இடங்கள் பற்றி திட்டமிடப்பட்டது.

இன்று 2வது நாளாக மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 23ந்தேதிக்கு பிறகு அடுத்தக்கட்ட சுற்றுப் பயணத்தை எப்போது தொடங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆர்வமிகுதியால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கமல் மன்ற நிர்வாகிகள் சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில் வந்து குவிந்தனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக ஆழ்வார் பேட்டை அலுவலகத்துக்கு வந்த கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விரைவில் கமலின் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். கமல் சுற்றுப்பயணம் மக்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்கள்.

கூட்டம் முடிந்ததும் கமல்ஹாசன் கூறியதாவது:-

ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும் தற்போது இலக்கு மாறியுள்ளது . நாம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம் என பதட்டப்படுபவர்களுக்கு சொல்லி கொள்கிறேன். நாம் வெற்றியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம்.சாதி என்ன, மதம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது கிடையாது; இனியும் அப்படித்தான் இருக்கும்

தற்போது சற்று இலக்கு மாறி இருக்கிறது நாம் கஜானாவை நோக்கி செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மக்களை நோக்கிச்செல்லும் பயணம் விரைவாக இருக்கும். சாதி மதம் கடந்த பயணமாக இது இருக்கும்.சுவரொட்டியில் எழுதப்படும் வாசகங்களை தலைமையின் அனுமதி பெற்று எழுதுங்கள், கண்ணியம் காக்கப்பட வேண்டும்

நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள்தான். இதுவரை ரசிகர்களிடம் நீங்கள் எந்தக் கட்சி என கேட்டதில்லை, இனி கேட்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com