

ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த 27 வயது கால்நடை பெண் மருத்துவர், கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அங்குள்ள சுங்கச்சாவடியில் அந்த பெண் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை லாரி டிரைவர் மற்றும் கிளனர்கள் 4 பேர் பஞ்சராக்கினர்.
பின்னர் உதவி செய்வதுபோல் அந்த பெண்ணை புதருக்குள் இழுத்து சென்று வாயில் மதுவை ஊற்றி பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பிறகு கழுத்தை நெரித்து கொன்று அவரது உடலை ஒரு பாலத்தின் அடியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து படுபாதக செயலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு கேமரா உதவியால் கொலையாளிகளை போலீசார் கைது செய்து பெண் மருத்துவர் எரிக்கப்பட்ட இடத்திலேயே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை இயக்குனர் ராம்கோபால் வர்மா சினிமா படமாக எடுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு பிறகு நடந்த கொடுமையான சம்பவத்தை படமாக எடுக்கிறேன். படத்தில் பாலியல் குற்றவாளிகள் பற்றியும் அவர்கள் ஏன் பெண் மருத்துவரை கொன்றார்கள் என்பது பற்றியும் காட்சிகள் இடம்பெறும். இந்த படம் அனைவருக்கும் பாடமாக அமையும் என்றார்.