இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 20 Aug 2023 1:30 AM GMT (Updated: 20 Aug 2023 1:30 AM GMT)

மற்றவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் உங்கள் உதவியை ஒருவர் பயன்படுத்திக் கொள்வது என்பது ஆரோக்கியமற்றது. முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் முடியாது என்று சொல்வது ஒரு முக்கியமான வாழ்க்கைத் திறமையாகும்.

1. நானும் எனது உறவினர் மகளும் ஒரே வயது உடையவர்கள். சிறுவயதில் ஒன்றாக படித்தோம். நான் கல்லூரி முடித்தவுடன் வேலைக்குச் சென்று விட்டேன். எனது உறவினர் மகள் சற்று அமைதியான மற்றும் மற்றவர்களிடம் அதிகம் பேசாத சுபாவம் உடையவள். நான் அதற்கு எதிரான குணாதிசயம் உடையவள். இதனால் அவளை, அவளது பெற்றோர், என்னை உதாரணமாக காட்டி குறை சொல்லி திட்டி வந்தார்கள். மேலும் எங்கள் இருவரின் பெற்றோருக்குள்ளும் குடும்ப பிரச்சினை ஏற்பட, எங்களிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. தற்போது அவளும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டாள். ஆனாலும், எங்களுக்குள் ஏற்பட்ட இடைவெளி இன்னும் சரியாகவில்லை. இதை சரிசெய்து, மீண்டும் பழையபடி தோழிகள்போல நாங்கள் பழக என்ன செய்வது?

அவள் இப்போது வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டாள். இதனால் பலரிடம் பேசவும், பழகவும், வெவ்வேறு சூழலை எதிர்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அவளுடைய பெற்றோர் அவளை உங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நீங்கள் பொறுப்பல்ல. உங்களுடன் ஒப்பிடாமல் சுயபரிசோதனை செய்து, யதார்த்தத்தை புரிந்துகொள்ள அவளுக்கு இதுவே சிறந்த நேரம். அவளுடன் உரையாடலைத் தொடங்குங்கள். உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். அவள் உங்களுடன் தொடர்புகொள்ள விரும்பவில்லை என்றால் பிரச்சினை உங்களுடையது அல்ல, அவளுடையது. இந்த விஷயத்தில் மற்றவரின் பிரச்சினையை நீங்கள் சரிசெய்ய முடியாது. உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்காக உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கொள்ளாதீர்கள். காலமே இதை சரிசெய்யும்.

2. நான் கடந்த 4 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். எனது கல்லூரி தோழிகள், கல்லூரி முடிந்தபின்பு என்னுடன் தொடர்பில் இருந்து விலகிவிட்டனர். திடீரென சில வருடங்களுக்கு முன்பு பண உதவி கோரி என்னைத் தொடர்புகொண்டு உதவியின் பலனை பெற்றுக்கொண்டனர். இதேபோல் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் இல்லாதவர்களும் என்னை அவ்வப்போது தொடர்புகொண்டு பண உதவி கேட்கிறார்கள். எனக்கு உதவி என்று கேட்பவர்களிடம் மறுப்பு கூறும் பழக்கம் சிறு வயதில் இருந்தே இல்லை. ஆகையால் அனைவருக்கும் என்னாலான உதவியை செய்து விடுவேன். என்னிடம் உதவி பெற்ற அனைவரும் என்னுடன் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் என்னுடன் நெருக்கமான நட்பில் இருப்பது போன்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்கிறார்கள். இந்த நிலை எனக்கு பதற்றத்தையும், என்னைப் பயன்படுத்திக்கொள்பவர்களிடம் இருந்து என்னால் மீளவே முடியாதோ என்ற அச்ச உணர்வையும் கொடுக்கிறது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவது? ஆலோசனை கூறுங்கள்.

உங்களுடைய தன்முனைப்புத் தன்மையற்ற குணமே உங்களை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் உங்கள் உதவியை ஒருவர் பயன்படுத்திக் கொள்வது என்பது ஆரோக்கியமற்றது. முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் முடியாது என்று சொல்வது ஒரு முக்கியமான வாழ்க்கைத் திறமையாகும். அதை செயல்படுத்தாமல் மற்றவர்களிடம் எல்லையை உங்களால் வரையறுக்க முடியாது. இந்த சூழல் மற்றவர் உங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையை எளிதாக வகுக்கும். நீங்கள் உதவி செய்வதால், மகிழ்ச்சி அடைகிறீர்களா அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறீர்களா என்று நீங்களே உங்களுக்குள் கேள்வி கேளுங்கள். உதவி பெற்றவரின் மகிழ்ச்சியால், நீங்கள் திருப்தி அடைபவராக இருந்தால், அது ஒரு கட்டத்தில் உங்களுக்குள் மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். ஆகையால், உங்களை நீங்களே நேசிக்க ஆரம்பியுங்கள், அதற்கு உங்களுடைய தன்முனைப்புத் தன்மையே கைகொடுக்கும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in


Next Story