வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு

வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
Published on

வீட்டுப் பராமரிப்பு இரண்டு வகைப்படும். முதலாவது வீட்டு உபயோகப் பொருட்களை பராமரிப்பது. இரண்டாவது வீடு என்ற கட்டிடத்தைப் பராமரிப்பது ஆகும். அவ்வகையில், வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பில் இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் சில அவசியமான குறிப்புகளை இங்கே காணலாம்.

குடும்ப உறுப்பினர்கள் தவிர வெளியாட்கள் பலரும் வந்து செல்வதால் ஹாலில் உள்ள பர்னிச்சர் பொருட்கள், தரை விரிப்புகள், மிதியடிகள் ஆகியவற்றில் கண்ணுக்குத் தெரியாத பல நுண் கிருமிகள் இருக்கக்கூடும். அதனால் தினமும் ஹால் பகுதியை சுத்தமாக பராமரிப்பது அவசியம்.

அறைகளில் உள்ள பரண்களில் பழைய பொருட்களை வைப்பது, படுக்கைக்கு அடியில் பல்வேறு தட்டுமுட்டு சாமான்கள் வைப்பது ஆகியவற்றை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அதனால் அப்பகுதிகளில் தூசி படிவதுடன் பல்லிகள், இதர சிறு பூச்சிகள் பெருகக்கூடும்.

மெத்தைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கீழே உள்ள பகுதி மேலே வருவதுபோல திருப்பிப் போட வேண்டும். அதன் காரணமாக மெத்தைக்குள் இருக்கும் பஞ்சு சீரான முறையில் பரவி முதுகு வலி வராது தடுக்கப்படும். வாரம் ஒரு முறை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவற்றை சலவை செய்து உபயோகப்படுத்துவது நல்லது.

ஜன்னல் மற்றும் கதவுகளை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். திரைச் சீலைகள், குஷன் கவர், சோபா கவர், மெத்தை கவர் ஆகியவற்றை மாதம் ஒருமுறை மாற்றுவது அல்லது சலவை செய்து உபயோகப்படுத்தலாம்.

வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது. ஒரு வாரத்துக்கு மேலாக அதை பயன்படுத்தாத சூழலில், நேராக நிறுத்தி வைக்க வேண்டும். இன்வர்ட்டரின் மீது தூசி படியாமல் இருப்பதற்காக துணி அல்லது அட்டைப் பெட்டிகளால் மூடி வைப்பது ஆபத்தை விளைவிக்கும்.

பர்னிச்சர்களில் படியும் தூசியை உடனுக்குடன் சுத்தம் செய்யாவிட்டால் அழுக்காக மாறி விடும். அதனால், பாலிஷ் அல்லது ஸ்ப்ரே தெளித்து சுத்தமான துணியால் பர்னிச்சர் வகைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் துடைக்கலாம்.

குழந்தைகள் விளையாட்டு பொருட்களை வைத்து எடுப்பது, இடம் நகர்த்துவது போன்ற காரணங்களால் மர பர்னிச்சர்களில் ஏற்படும் சிராய்ப்புகளை அகற்ற, முட்டை மஞ்சள் கருவுடன் வினிகர் சேர்த்து பசை போல் கலக்கி சிராய்ப்பில் பூசி, சில நிமிடங்களுக்குப் பிறகு துடைத்து விடலாம்.

தரையைக் கழுவும்போது வாசற்கால், கதவுகள், கட்டில் கால்களில் தண்ணீர் படுவதால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு அவற்றின் அடிப்பாகத்தில் வார்னிஷ் பூச வேண்டும்.

குளியல் மற்றும் கழிவறைகளில் கரப்பான் பூச்சிக்கொல்லி, எறும்புக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்வதன் மூலம் அவற்றின் தொல்லை ஏற்படாமல் தடுக்கலாம்.

மெத்தையில் தண்ணீர் கொட்டினாலோ அல்லது குழந்தைகள் ஈரமாக்கினாலோ கீழே இருக்கும் பிளைவுட்டில் ஈரம் பரவி பூஞ்சை உருவாகுவதைத் தவிர்க்க முன்னதாகவே வார்னிஷ், வுட் பிரைமர் பூசுவது நல்லது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com