உலக நதிகள் தினம்
உலகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.
நாகரிக வாழ்வின் ஆரம்பமாக இருந்தவை நதிகள். வேளாண்மை, உற்பத்தி, வனங்கள் ஆகியவற்றின் மூலதனமான நதிகளை முன்னோர்கள் தெய்வங்களாக வணங்கினார்கள். இதன்மூலம் அவை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் ஐ.நா. சபை, உலகில் உள்ள நீர் வழிப்பாதைகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை (செப்டம்பர் 27) 'உலக நதிகள் தினமாக' அறிவித்தது. உலகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.
போகும் பாதை முழுவதும் வளங்களைப் பரிசாகக் கொடுத்துச் செல்பவை நதிகள். மக்களின் முக்கியமான நீர் ஆதாரமான நதிகள் தூர்ந்துபோவதும், குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
பூமித்தாயின் நரம்புகளான நதிகளின் ஓட்டம் இல்லாமல் போனால், உயிர்களின் வாழ்வியல் வளமற்று போகும். வறட்சி, பஞ்சம், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, வன உயிர்களின் அழிவு போன்றவை தொடர்கதையாகிவிடும். எனவே நதிகள் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், அவற்றின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறைக்கு உணர்த்துவதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.