வாழ்க்கையில் நன்றியுணர்வின் முக்கியத்துவம்…

எந்த நாள் வேண்டுமானாலும் உங்கள் கடைசி நாளாக இருக்கலாம். எனவே நன்மைகளால் சூழப்பட்ட இந்த அழகான வாழ்க்கையில் நன்றியுடன் இருங்கள்.
வாழ்க்கையில் நன்றியுணர்வின் முக்கியத்துவம்…
Published on

நேர்மறையான உளவியலைப் பற்றிய ஆராய்ச்சியின்போது நன்றியுணர்வு, மகிழ்ச்சியான மனநிலையோடு வலுவான தொடர்பு கொண்டது என்று கண்டறியப்பட்டது. வாழ்க்கையில் துன்பங்களை கடந்து செல்வதற்கும், வலுவான உறவுகளை உருவாக்குவதற்கும், நேர்மறையான உணர்வுகளைப் பெறுவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் நன்றியுணர்வு உதவும்.

ஆனால் நாம் பல நேரங்களில், வாழ்க்கையில் நமக்கு கிடைத்த விஷயங்களுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். மற்றவருக்குக் கிடைக்காத பல நன்மைகள் நமக்கு கிடைத்திருக்கும். அதை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்கு தவறி இருப்போம்.

வாழ்க்கையில் நமக்கு கிடைத்த சின்னச் சின்ன நன்மைகளுக்கும், உதவி செய்த நபர்களுக்கும், கிடைத்த பொருட்களுக்கும் நன்றியுணர்வுடன் இருந்தால், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நன்றி உணர்வானது தூக்கம், மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மனச்சோர்வு, பதற்றம், நாள்பட்ட வலியால் ஏற்படும் சிரமங்கள் மற்றும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

நன்றி உணர்வை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

நம்மில் பலர், நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் இருந்து அன்பு, அங்கீகாரம், பாராட்டு மற்றும் பாசத்தைக் கொடுப்பதிலும், கேட்பதிலும் மும்முரமாக இருக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும் நமக்கு நாமே வழங்கிக் கொள்வதைப் பற்றி சிந்தித்து இருக்கிறோமா?

முதலில் உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லுங்கள். மற்றவர்கள் உங்களுக்காக செய்த நன்மைகளுக்கு மட்டும் தான், நன்றி செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் வளர்த்துக் கொண்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுக்காக, உங்களுக்காக நீங்கள் செய்த நல்ல விஷயங்களுக்காக, போதுமான நேரத்தை ஒதுக்கி உங்களுக்கு நீங்களே நன்றி தெரிவியுங்கள்.

உங்கள் படுக்கைக்கு அருகில் ஒரு நாட்குறிப்பை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய அன்றைய தினத்தை தொடங்கும்போது அல்லது இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, நீங்கள் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து அதில் எழுதுங்கள். குறைந்தது ஒரு மாதமாவது இதைத் தொடர்ந்து செய்து வரும்போது, உங்கள் மனநிலையிலும், வாழ்க்கையிலும் உண்டாகும் நேர்மறையான மாற்றங்களை நீங்களே உணர முடியும்.

கடந்த காலத்தில் உங்களை காயப்படுத்திய ஒருவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதுங்கள். அவரது செய்கையால் நீங்கள் எந்த அளவுக்கு பக்குவப்பட்டு இருக்கிறீர்கள்? அதில் இருந்து மீண்டு வந்து, உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைத்துக் கொண்டீர்கள்? என்று எழுதுங்கள். இதை நீங்கள் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் அனுப்பலாம் அல்லது நீங்களே வைத்துக் கொள்ளலாம். எந்தவொரு கசப்பான சூழ்நிலையில் இருந்தும் வெளிவந்து, அதனால் கிடைக்கும் நன்மைகளை மட்டுமே சிந்தித்து முன்னேறுவதற்கு இது உதவும்.

எந்த நாள் வேண்டுமானாலும் உங்கள் கடைசி நாளாக இருக்கலாம். எனவே நன்மைகளால் சூழப்பட்ட இந்த அழகான வாழ்க்கையில் நன்றியுடன் இருங்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com