தஞ்சையில் மன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதயவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் மன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா இன்று காலை 8.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி உள்ளது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்குகிறார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் தொடங்கி வைத்து பேசுகிறார். பழனி ஆதீனம் குரு மகாசன்னிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்குகிறார். பின்னர் காலை 11 மணிக்கு வரலாறாக வாழும் மாமன்னன் ராஜராஜன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. தொடர்ந்து நாதசுரம், பரதநாட்டியம், யாழ்இசை, வில்லுப்பாட்டு, நாத சங்கமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மாலை 6 மணிக்கு பழங்கால இசைக்கருவிகளோடு நாட்டிய கலைஞர்கள் பங்குபெறும் மாமன்னன் ராஜராஜசோழன் விஜயம் என்ற மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பன்முக ராஜராஜனை பாடுவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது.

இரவு 8 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழனின் நிலைத்த பெரும் புகழுக்கு காரணம் அவரது நிர்வாகப் பணியா? கலைப் பணியா ? என்ற தலைப்பில் தமிழ் இனிமை பட்டிமன்றம் நடக்கிறது. பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் நடுவராக செயல்படுகிறார். இரவு 9.30 மணிக்கு நவீன தொழில்நுட்பத்தில் சதய நாயகன் ராஜராஜன் என்ற வரலாற்று நாடகம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com