

சென்னை,
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கொரோனா வைரஸ் தடுப்பு யுக்தி குறித்து வெளிநாட்டு தூதர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுத்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், பிஜி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணை தூதரக அதிகாரிகள், தெற்கு ரெயில்வே அதிகாரிகள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அனைவருக்கும் விளக்கினார்.
பின்னர் துணை தூதரக அதிகாரிகளுக்கு உள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உரிய விளக்கங்களை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
இதுவரை தமிழகத்தில் 8 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 74 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி ஆகியுள்ளது.
தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு உள்ளது. மேலும் மதுரை மற்றும் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க விசேஷ மருத்துவமனைகள் தயாராகி வருகிறது.
முதலில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், பஸ்கள் மற்றும் ரெயில்களில் வரும் பயணிகளுக்கும் முதற்கட்ட சோதனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரசை கண்டுபிடிக்க ரத்த பரிசோதனை மையம் சென்னை கிங்ஸ் ஆய்வகத்திலும், தேனி ஆய்வகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதைப்போல் 4 இடங்களில் ரத்த பரிசோதனை மையம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ரத்த பரிசோதனை ஆய்வகம் அமைக் கப்பட வேண்டிய தேவை இல்லை. தேவை ஏற்பட்டால் அமைப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.