2018-ல் மணிக்கு 53 சாலை விபத்துக்கள், 17 மரணங்கள் -மத்திய அரசு ஆண்டு அறிக்கை

2018-ல் மணிக்கு 53 சாலை விபத்துக்கள், 17 மரணங்கள் ஏற்பட்டு உள்ளன என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
Published on

புதுடெல்லி

2018 ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்துக்களில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 2.4 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2017 ஆம் ஆண்டில் 1.47 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருந்தன.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் தொடர்பான ஆண்டு அறிக்கையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாள் தோறும் சராசரியாக 1,280 சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் 415 உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. சராசரியாக மணிக்கு 53 விபத்துக்கள், 17 உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை போக்குவரத்து காயங்கள் இறப்புகளுக்கு எட்டாவது முக்கிய காரணமாக இருக்கின்றன.

2018 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் இறந்தவர்களில் 48 சதவீதம் பேர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். சாலை விபத்துகளில் பலியானவர்கள் பெரும்பாலும் அதிக வேகமாக சென்றதால் பலியாகி உள்ளார்கள். இது 64.4 சதவீதம் ஆகும்.

தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டியது. இதன் மூலம் இறப்பு 5.8 சதவீதம் ஆகும். மொபைல் போனில் பேசிகொண்டே சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் 2.4 சதவீதம் ஆகும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதில் 2.8 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர்.

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் அணியாமல் இருப்பது விபத்துக்கான காரணங்கள் அல்ல, ஆனால் கடுமையான காயங்கள் மற்றும் இறப்புகளைத் தவிர்ப்பதற்கு இவைகள் முக்கியமானவை.

கடந்த ஆண்டு நாட்டில் 43,614 இறப்புகள் அல்லது 28.8 சதவீத இறப்புக்கள் ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்டு உள்ளன. சீட் பெல்ட் அணியாததால் 24,435 இறப்புகள் ஏற்பட்டு உள்ளது.

மாநிலங்களில், மொத்த சாலை விபத்துகளின் அடிப்படையில் தமிழகம் (13.7 சதவீதம்) முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் (11 சதவீதம்), உத்தரபிரதேசம் (9.1 சதவீதம்) இரண்டாமிடத்திலும் உள்ளன. அதிக சாலை விபத்துக்கள் உத்தரபிரதேசத்தில் (22,256), மராட்டியத்தில் (13,261), தமிழ்நாடு (12,216) ஏற்பட்டு உள்ளன என அதில் கூறப்பட்டு உள்ளது.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக சாலை கூட்டமைப்பின் 2018 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் படி 199 நாடுகளில் சாலை பயன்படுத்துபவர்களுக்கு இந்தியா மிகவும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது. இதைத் தொடர்ந்து சீனா (63,000 இறப்புகள்) மற்றும் அமெரிக்கா (37,000 இறப்புகள்) ஏற்படுகின்றன.

இந்த அறிக்கை குறித்து, சேவ் லைஃப் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான பியூஷ் திவாரி கூறும் போது,

2018 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரித்துள்ளது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், கவனிக்க வேண்டியது என்னவென்றால், மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்த அல்லது அபராதங்களைக் குறைத்த பல மாநிலங்கள் அதிக சாலை விபத்துக்களை எதிர் கொண்ட மாநிலங்களில் உள்ளன. மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், 2019 இன் முக்கிய சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த மாநிலங்களின் அவசரத் தேவையை சமீபத்திய தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன என கூறினார்.

திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதங்களை பெரிதும் குறைத்த மாநிலங்களில் உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை அடங்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com