6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் துப்புரவு பணியாளர் கைது

கெங்கவல்லி அருகே, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு பணியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Published on

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் கல்யாணசுந்தரம் (வயது 40). இவர் கொண்டைபள்ளி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக இருந்து வருகிறார். இவர் நேற்று காலை குடிபோதையில் 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் இருந்து புதிய பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை தூக்கிக்கொண்டு மறைவான இடத்திற்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி அழுத சத்தத்தை கேட்ட அவளது பாட்டி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

பின்னர் கல்யாண சுந்தரத்துக்கு தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்யாணசுந்தரத்தை பிடித்து, ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com