‘இ-சஞ்சீவனி’ சேவை மூலம் 6,471 பேர் பயன் அடைந்துள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வீட்டில் இருந்தபடி டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெறும் ‘இ-சஞ்சீவனி’ சேவை மூலம் 6,471 பேர் பயன் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Published on

சென்னை,

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிற நோயாளிகள் வீட்டில் இருந்தபடி டாக்டர்களிடம் மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் இ-சஞ்சீவனி என்ற பெயரில் இணையதளம், செல்போன் செயலி (ஆப்) தமிழக அரசு சார்பில் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சேவையை பயன்படுத்தி டாக்டருடன் வீடியோ கால் மூலம் ஆலோசனை பெற முடியும். டாக்டர் பரிந்துரை செய்யும் மருந்துக்களின் சீட்டு ஆலோசனை பெற்றவர் செல்போனுக்கே அனுப்பிவைக்கப்படும். அதை பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியார் மருந்தகங்களில் மருந்துகள் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

இ-சஞ்சீவனி திட்டத்தில் பொதுமக்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் ஆலோசனை பெறலாம். தமிழகத்தில் உரிய பயிற்சி பெற்ற 617 அரசு டாக்டர்களை ஈடுபடுத்தி இந்த சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது. அடுத்தகட்டமாக அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு டாக்டர்களும் இந்த சேவை மூலம் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர். இ-சஞ்சீவனி சேவை மூலம் இதுவரை 6 ஆயிரத்து 471 பேர் பயன அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்ச எண்ணிக்கையில் டாக்டர்களை பயன்படுத்தியும், பொதுமக்களில் அதிக நபர்களுக்கு இந்த சேவை மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com