திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 12 படுக்கைகள் கொண்ட மேலும் ஒரு தனி வார்டு டீன் தகவல்

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 12 படுக்கைகள் கொண்ட மேலும் ஒரு தனி வார்டு அமைக்கப்பட்டு வருகிறது என்று டீன் வனிதா கூறினார்.
Published on

திருச்சி,

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 12 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய மேலும் ஒரு தனி வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 நாட்களில் இந்த வார்டு தயார் நிலைக்கு வந்துவிடும். கோழிக்கறிக்கும், கொரோனா வைரஸுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை 9 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.

அச்சம் தேவையில்லை

தற்போது ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஆகவே கொரோனா குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. இதுவேகமாக பரவக்கூடிய வைரஸ் என்பதால் இருமல், தும்மலின்போது முகத்தை மூடிக் கொள்ளுதல், கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவி தூய்மையாக வைத்து இருந்தால் கொரோனா பரவாமல் தடுக்கலாம். திருச்சி அரசு மருத்துவமனையில் 2018-ம் ஆண்டு இருதய உள்துளை சிகிச்சைக்காக கேத்லேப் தொடங்கப்பட்டது. இங்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆஞ்சியோகிராம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் திருச்சி அரசு மருத்துவமனையில் ஆயிரம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com