விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை பணியை விரைவுபடுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை

விருதுநகர்-சாத்தூர் இடையே திட்டமிட்டபடி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

விருதுநகர்,

விருதுநகர்-சாத்தூர் இடையே கடந்த 2008-ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு நிலம் கண்டறியும் பணி முடிவடைந்த பின்பு இத்திட்ட பணி கைவிடப்பட்டது. இதைதொடர்ந்து மத்திய அரசின் உற்பத்தி முதலீட்டு மையம் இங்கு அமைக்கப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால் தமிழக அரசு பரிந்துரை செய்யாததால் இந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர்-சாத்தூர் இடையே 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்தார்.

இந்த தொழிற்பேட்டைக்கான நிலம் கண்டறியும் பணியை மேற்கொள்ள சிறப்பு மாவட்ட அதிகாரி தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த சிறப்பு குழுவினர் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கண்டறிந்து அதனை கையகப்படுத்தும் பணிகளை தொடங்கினர். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கீடு தாமதமானதால் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமானது. முதற்கட்டமாக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் நிலம் கையகப்படுத்தும் பணி முனைப்புடன் நடைபெறவில்லை.

இந்தநிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தொழில்துறை மானிய கோரிக்கையின் போது விருதுநகர்-சாத்தூர் இடையே அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டையை 2 ஆயிரம் ஏக்கரில் அமைப்பதற்காக திட்டமிட்டு இருந்த போதிலும் அப்பகுதியில் நிலபிரிவினை அதிகம் இருப்பதால், இத்தொழிற்பேட்டையின் நிலப்பரப்பினை 1,500 ஏக்கராக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே திட்டமிட்டதில் 4-ல் ஒரு பங்கு குறைக்கப்பட்டதால் இந்த தொழிற்பேட்டையில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் இடம் பெறாத நிலை ஏற்படும்.

மானாவாரி விவசாயத்தை நம்பி உள்ள விருதுநகர் மாவட்டத்தில் தொடர் வறட்சி காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சிப்காட் தொழிற்பேட்டை அமைக் கப்பட்டால் இம்மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். மேலும் இந்த பகுதியில் தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த தொழில்முனைவோருக்கு தொழிற்பேட்டைக்கான நிலப்பரப்பு குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை போல சிப்காட் தொழிற்பேட்டைக்கும் திட்டம் முழுமை பெறாத நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரிவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வளம் பெருகவும், அதிக எண்ணிக்கையில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com