ஏப்ரல் 18-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்கக்கூடாது - மயிலாடுதுறையில், மு.க.ஸ்டாலின் பேச்சு

ஏப்ரல் 18-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்கக்கூடாது என்று மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கத்துக்கு ஆதரவு திரட்டும் பிரசார பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற 18-ந் தேதி நடை பெறும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் நரேந்திரமோடி நடத்தும் சர்வாதிகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதேநேரத்தில் மாநில உரிமைகளை விட்டு கொடுக்கும் கொலை, கொள்ளைக்கார ஆட்சியை அப்புறப்படுத்த இந்த தேர்தலை சந்திக்கிறோம். நாம், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. இதேபோல் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.

சட்டசபையில் தற்போது நமது பலம் 97 உறுப்பினர்களாக உள்ளது. இதில் 22 உறுப்பினர்கள் சேரும்போது 119 ஆக, நமது பலம் உயரும். 117 உறுப்பினர்கள் இருந்தாலே ஆட்சிக்கு வரலாம். நாம் ஆட்சிக்கு வருகிறதோ? அல்லது வருவதற்கு இடையூறு வருகிறதோ? அது முக்கியமல்ல. எப்படி இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்கக்கூடாது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி. இதை பா.ஜனதா கட்சி அதிர்ச்சியாக பார்க்கிறது. அதனால் தி.மு.க.வை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா கட்சி சூது, வாது செய்து வருமான வரி சோதனை நடத்துகிறார்கள். அதனை ஏற்றுக்கொள்கிறோம்.

நாம் புகார் தந்தால் நரேந்திரமோடி வீட்டிலும், எடப்பாடி வீட்டிலும், அவர்களது பினாமிகளின் வீடுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்துவார்கள். 5 ஆண்டுகளாக நரேந்திரமோடி ஆட்சி, தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி என்று இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து என்ன சாதனைகளை செய்தார்கள்?. மத்திய-மாநில அரசுகள் அவர்களது சாதனைகளை சொல்ல வாய்ப்பில்லை. எதிர் அணியை வசைபாடுவதே வேலையாக வைத்துள்ளனர்.

புதுடெல்லி வரை சென்று விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதுபற்றி சொன்னால் நானும் ஒரு விவசாயி என்கிறார், எடப்பாடி பழனிசாமி. அவர் விவசாயி அல்ல, விஷவாயு. அவர்கள் குறுக்கு வழியில் பண விவசாயம் செய்துள்ளனர். நாங்கள் சீட்டுக்கு, நோட்டுக்கு கூட்டணி அமைக்கவில்லை. அவர்கள், கொள்கை ரீதியில் கூட்டணி அமைக்கவில்லை. கொள்ளையடிக்கவே கூட்டணி அமைத்துள்ளனர்.

ரபேல் ஊழலில் பா.ஜனதா சிக்கியதை கண்டுபிடித்தவர் ராகுல்காந்தி. ஆனால் ஊழல் இல்லாமல் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தினோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றனர். நரேந்திரமோடி நாட்டுக்கு காவலாளி என்கிறார். ஆனால், திருட்டு கூட்டத்திற்கு துணைபோகிற களவாணி தான் நரேந்திரமோடி.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு கொலையில் உள்ள மர்மம், பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பின்னணியில் உள்ளவர்களின் மர்மம் ஆகியவற்றுக்கு தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காண்பித்து சிறையில் அடைப்போம்.

நமது தலைவர் கலைஞர், பல பிரதமர்களை தேர்ந்தெடுக்க வழிகாட்டினார். ஜனாதிபதியை அடையாளம் காட்டினார். எத்தனை தடைகள் வந்தாலும் உலக அளவில் தமிழர்களின் தலைவராக இருக்கும் கலைஞரின் வழியில் நின்று மாபெரும் வெற்றி பெறுவோம். விரைவில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com