இனவெறி எதிர்ப்பு போராட்டங்களால் அதிர்ந்தது அமெரிக்கா: பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்

இனவெறி எதிர்ப்பு போராட்டங்களுக்காக, பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் அமெரிக்கா அதிர்ந்தது.
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வெள்ளை இனத்தை சேர்ந்த போலீஸ் பிடியில் கடந்த 25-ந் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் 4 பேர் நீக்கப்பட்டும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் போராட்டங்கள் தொடர்கின்றன.

நேற்று முன்தினம் தொடர்ந்து 12-வது நாளாக நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்கள் இனவெறிக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

வாஷிங்டனில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் வெள்ளை மாளிகை நோக்கி சென்றுவிடாமல் போலீஸ் படையினர் தடுத்தனர். இருப்பினும் அவர்கள் நாடாளுமன்றம், ஆபிரகாம் லிங்கன் நினைவுச்சின்னம் மற்றும் வெள்ளை மாளிகை அருகேயுள்ள லாபாயெட்டே பூங்காவுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

நியுயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

சான்பிரான்சிஸ்கோவில் நடந்த போராட்டத்தில் அங்குள்ள கோல்டன் கேட் பாலத்தை சிறிதுநேரம் போராட்டக்காரர்கள் மூடினர். சிகாகோவில் யூனியன் பூங்காவில் 30 ஆயிரம் பேர் திரண்டதாகவும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டக்காரர்களால் ஹாலிவுட் சந்திப்பு முடங்கியது.

மொத்தத்தில் நாடு முழுவதும் 12-வது நாளில் நடந்த போராட்டங்கள் அதிர வைப்பதாக அமைந்தது.

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்ட் பிறந்த வடக்கு கரோலினா மாகாணத்தில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com