வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று 30 பேர் தேசியக்கொடி ஏந்தியபடி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. இதனால் கொடியுடன் வந்தவர்களை யாரும் தடுக்கவில்லை.
இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீசார் விரைந்துசென்று அவர்களை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் 30 பேரை கைது செய்தனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக நடக்கிறது.
சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு முன்னதாகவே சில வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். எனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை ரத்து செய்து, அவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கவேண்டும்.
வேலூர்தொகுதி தேர்தல் எந்த காரணத்திற்காக நிறுத்தப்பட்டதோ, அதற்கு காரணமானவர்கள் மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தேர்தல் நடத்தும் அலுவலரின் செயல் மக்களாட்சியை கேலிக் கூத்தாக்குவதாகும். இந்திய இறையாண்மைக்கு எதிராக நடக்கும் தேர்தலை தடுத்து, சீர்திருத்தம் செய்து நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தேர்தலை நடத்தவேண்டும் என்று அவர்கள் கூறினர்.