கொரோனா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு - தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரி உத்தரவு

கொரோனா வைரஸ் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
Published on

ஈரோடு,

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் அந்த வைரசின் பாதிப்பு காணப்படுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

சீனாவில் தொடங்கி 24 நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகை பள்ளிக்கூட மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா அறிகுறி, பரவும் விதம், பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டிய தடுப்பு முறைகள் ஆகியன குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இருமல், தும்மல் உள்ள மாணவர்கள் கட்டாயம் கைக்குட்டை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கூடங்களுக்கு வருவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக மாணவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பொது இடங்கள் அல்லது வெளியிடங்களுக்கு மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக கடைபிடிக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உத்தரவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com