அவதார தின விழா
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதி உள்ளது. இந்த பதியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்ட சாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை வைகுண்டர் அவதார தினமாக அய்யாவழி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அன்றைய தினம் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் ஊர்வலம் நடைபெறும். இந்த ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
பேரணி
இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வருகிறது. பேரணிக்கு பால.லோகாதிபதி தலைமை தாங்குகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பேரணி பாறசாலை, குழித்துறை, தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.
இதே போல் இன்று காலை 6 மணிக்கு திருச்செந்தூர் அவதார பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இதற்கு வக்கீல் யுகேந்த் தலைமை தாங்குகிறார். இந்த பேரணி திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.
சமய மாநாடு
இன்று இரவு நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டில் அய்யா வழி பிரமுகர்கள், அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதி முன்பு இருந்து மகாதீபம் ஊர்வலமாக கொண்டுசென்று ஆதலவிளை வைகுண்ட மாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார்.
ஊர்வலம்
நாளை அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பு தலைமைப் பதியை நோக்கி அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் அவதார தின ஊர்வலம் புறப்படுகிறது. இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். ராஜவேல் முன்னிலை வகிக்கிறார்.
ஊர்வலம் கோட்டார், சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமைப் பதியை வந்தடைகிறது. அங்கு அய்யாவுக்கு பணிவிடை நடைபெறுகிறது. இரவு சாமிதோப்பு கலையரங்கில் கருத்தரங்கம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.