இளம்பெண் மர்ம சாவில் திருப்பம்: காதலிக்க மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்ற உறவினர் கைது

இளம்பெண் மர்ம சாவு வழக்கில், காதலிக்க மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
Published on

தாம்பரம்,

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகள் அகிலா (வயது 20). இவர், சென்னை தாம்பரம் இரும்புலியூரில் தோழியுடன் அறை எடுத்து தங்கி, பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார்.

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் வசிக்கும் இவரது அக்காள் அருள்மொழி, தனது கணவர் சதீசுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சதீஷின் தம்பி சந்தோஷ் (28), தனியாக பேச வரும்படி அழைத்ததால் 9-ந்தேதி இரவு அவரது வீட்டுக்கு அகிலா சென்றார்.

மறுநாள் காலை அகிலா, அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந் தார். இதுபற்றி சந்தோஷ், தனது உறவினர்கள் மற்றும் போலீசாரிடம், நான் அகிலாவிடம் பேசுவதற்காக வீட்டுக்கு அழைத்துவந்தேன். இருவரும் மாடியில் ஏறும்போது கிரில் கேட்டில் அகிலா தலை மோதியதில் இடது புருவத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டோம். மறுநாள் அசைவற்று கிடந்த அகிலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்ததாக கூறினார்.

ஆனால் அகிலா சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை சந்தோஷ்தான் கொலை செய்து இருப்பார் எனவும் அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்தநிலையில் அகிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அகிலா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சந்தோஷிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், நான், அகிலாவை காதலித்து வந்தேன். ஆனால் அவர், வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி என்னை காதலிக்க மறுத்தார். சம்பவத்தன்று அவரை வீட்டுக்கு வரவழைத்து இது தொடர்பாக பேசினேன். அப்போதும் அவர் என்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது தலையில் கிரில்கேட் இடித்ததில் காயம் அடைந்து இறந்ததாக நாடகமாடியதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சந்தோசை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com