பழைய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கிகளில் செலுத்த அனுமதிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

பழைய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கிகளில் செலுத்த அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Published on

புதுடெல்லி,

கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், 500, 1000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ஆம் தேதி வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த உயர் மதிப்புடைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர்.

இதைதொடர்ந்து, மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கக் கூடாது. மீறி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், சுதா மிஷ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்த காலக்கெடுவுக்குள் என்னிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே என்னிடம் உள்ள நோட்டுக்களை வங்கியில் செலுத்த விரும்புகிறேன். அதற்கான வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல் வேறு சிலரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேர்மையான காரணங்களுக்காக பணத்தை மாற்ற முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாமே? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றத்திடம், இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கிகளில் செலுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. மீண்டும் பழைய ரூபாய் நோட்டுக்களை செலுத்த அனுமதி கொடுத்தால், கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கமே தோல்வி அடைந்துவிடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com