விசா இன்றி வேலைபார்த்ததாக கோர்ட்டில் வழக்கு: தமிழக பெண்கள் 9 பேர் ஓமனில் தவிப்பு

விசா இன்றி வேலைபார்த்ததாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தமிழகத்தை சேர்ந்த 9 பெண்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஓமனில் தவித்து வருகின்றனர்.
Published on

மஸ்கட்,

தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் சிலர் முறையான விசா இல்லாமல் விசிட் விசாவில் சென்று அங்கு சிக்கி விடுகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஏஜெண்டு மூலம் திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா மேரி, பரகத் நிஷா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த சாந்தி, பிரியா, செல்வி, பைரோஸ், நீது, சுமதி, சாய்னா பானு ஆகிய 9 பேர் விசிட் விசாவில் ஓமனுக்கு சென்றனர்.

அவர்கள் மஸ்கட்டில் வீட்டு வேலை செய்தனர். இந்த நிலையில் மனிதவளத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது விசிட் விசாவில் வேலை செய்து வந்த இந்த 9 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மீது முறையான விசா இன்றி வேலைபார்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 9 பேரும் இந்திய தூதரகத்தின் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் 9 பேர் மீதான வழக்கு விசாரணை மஸ்கட்டில் உள்ள கோர்ட்டில் நடந்து வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள், 9 பெண்களையும் தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.

விசிட் விசாவில் வந்த பெண்கள் மீதான வழக்கு மஸ்கட் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com