நாகர்கோவிலில் கடைகளில் 1 டன் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 1 டன் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளை பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவிலில் கடைகளில் 1 டன் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 1 டன் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

அதிரடி சோதனை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவை நாகர்கோவில் நகரில் உள்ள சில கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்துக்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் தலைமையில், மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்ஷால், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, பகவதிப்பெருமாள், தியாகராஜன் ஆகியோர் நேற்று நாகர்கோவில் கேப்ரோடு, கே.பி.ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

1 டன் பிளாஸ்டிக் பை

அப்போது கோட்டார் பகுதியில் உள்ள 2 மொத்த கடைகளில் 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள், பைகள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஒரு கடைக்கு ரூ.50 ஆயிரமும், இன்னொரு கடைக்கு ரூ.25 ஆயிரமும் என மொத்தம் ரூ.75 ஆயிரத்தை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர்.

அபராதம்

இதேபோல் ஒரு மளிகை கடை மற்றும் ஒரு ஓட்டலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் நேற்று ஒரே நாளில் 4 கடைகளுக்கு ரூ.85 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 2 மொத்த கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பைகள், கவர்கள், கப்புகள் ஆகியவற்றை மாநகராட்சி லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

நாகர்கோவிலில் ஆணையர் தலைமையில் கடைகளில் நடந்த இந்த திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com