

திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வியாபாரிகள், கடைக்காரர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், மார்க்கெட், ஓட்டல், பேக்கரி உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் அழைத்து மாநகராட்சி அதிகாரிகள் கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்களையும் அதிகாரிகள் கண்டறிந்து பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் உத்தரவின் பேரில் மாநகர் நல அதிகாரி பூபதி தலைமையில் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கே.எஸ்.சி. பள்ளி வீதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கிருந்த 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், குவளைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. அந்த கடைகளில் இருந்து 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட 2 கடையின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள பேக்கரி, ஓட்டல், வணிக வளாகங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியவற்றில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வு குறித்து மாநகர் நல அதிகாரி பூபதி கூறும்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று பல கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் மொத்தமாக விற்பனை செய்கிறார்கள். அதன்படி நேற்று ஒரேநாளில் 10 நிறுவனங்களில் சோதனை நடத்தி 1 எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.29 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடரும் என்றார்.