

ஓமலூர்,
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகா அளவிலான நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஓமலூர் வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ் வரவேற்றார். ஓமலூர் தாசில்தார் சித்ரா, காடையாம்பட்டி தாசில்தார் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கி பேசினார். ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:-
ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாக்களில் கடந்த ஓராண்டு காலத்தில் புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு கேட்டு 10,125 மனுக்கள் கொடுத்து இருந்தனர். இதில் தகுதி உள்ள 10 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.
பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உடனடியாக அமைக்க வேண்டும். பொது வினியோக திட்டத்தை சீராக்கும் வகையில் ரேஷன் கடைகள் வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளன. ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டத்தில் 99 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைதொடர்ந்து வெற்றிவேல் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஓமலூர் தொகுதியில் 1,000 ரேஷன் கார்டுகளுக்கு அதிகமாக உள்ள ரேஷன் கடைகளை பிரித்து பொதுமக்களுக்கு வசதியான இடங்களில் புதிய ரேஷன் கடைகள் உருவாக்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்தால் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தரப்படும். மலைப்பகுதிகளில் உள்ள கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்கிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் காடையாம்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் செல்லத்துரை நன்றி கூறினார்.