

நாசிக்,
நாசிக் சந்த்கிரியை சேர்ந்த 4 வயது சிறுமி ஷாலினி. இவள் நேற்று தின்பண்டம் வாங்கி தருமாறு தனது தாயிடம் அடம்பிடித்தாள். இதைத்தொடர்ந்து, அவளிடம் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்த தாய், அருகில் உள்ள கடைக்கு சென்று ஏதாவது வாங்கி சாப்பிடு என்று கூறினார்.
அந்த நாணயத்தை வாயில் போட்டு சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். இந்த நிலையில், துரதிருஷ்டவசமாக நாணயத்தை விழுங்கினாள். இதையறிந்த அவளது தாய், உடனடியாக மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
பின்னர், மேல்-சிகிச்சைக்காக நவீன சிறப்பு மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டாள். அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல், ஷாலினி பரிதாபமாக இறந்துபோனாள்.
10 ரூபாய் நாணயத்தை விழுங்கி, சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.