

வேதாரண்யம்,
நாகை மாவட்டத்தில் நிவர், புரெவி என அடுத்தடுத்து வந்த புயல்கள் காரணமாக கன மழை பெய்தது. இதனால் சுமார் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே நாகையில் வெயில் தென்பட்டது. இருப்பினும் இரவு, கடும் பனிப்பொழிவு தென்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு நேற்று அதிகாலை வரை பெய்தது. இதனால் நாகையில் குளிர்ந்த காலநிலை உருவானது. நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பைபர் படகு மற்றும் விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.
பலத்த மழை
வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு கள்ளிமேடு செம்போடை கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் வேதாரண்யம் பகுதி கடலில் ராட்சத அலைகள் எழுப்பி கடற்கரையை பலமாக தாக்கின. இதனால் வேதாரண்யம் பகுதியில் இருந்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மழைநீர் தேங்கியது
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் மீண்டும் வயல்களில் தண்ணீர் தேங்கியது.
வேதாரண்யத்தில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் ஏரி- குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யும் அறிகுறி இருந்ததால் வேதாரண்யம் பகுதி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. கன மழையால் வேதாரண்யம் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.