100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டை வெளியிடப்பட்டது.
100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டை வெளியீடு
Published on

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு தபால் அட்டையை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்டார். இதை தபால் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுவாதி மதுரிமா, உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் குருசங்கர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும் வகையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை வாக்களிப்பது என்பது குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டை மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வாக்காளர் விழிப்புணர்வு தபால் அட்டையில் வாக்காளர் உதவி எண் 1950 மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1800 425 8541 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அச்சிடப்பட்டு உள்ளது.

மேலும் அச்சிடப்பட்டு உள்ள 40 ஆயிரம் தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டைகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் தபால் அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்புக்குழு, 2 வீடியோ கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள் போன்றவை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அதன் விவரம் செலவின பார்வையாளருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மூலம் இதுவரை ரூ.18 லட்சத்து 95 ஆயிரத்து 800 மற்றும் 100 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக மாவட்டத்தில் இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com