சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி தர்மபுரி கலெக்டர் கார்த்திகா தொடங்கி வைத்தார்

வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மனிதச்சங்கிலியை கலெக்டர் கார்த்திகா தொடங்கி வைத்தார்.
சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி தர்மபுரி கலெக்டர் கார்த்திகா தொடங்கி வைத்தார்
Published on

தர்மபுரி,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் 2,000 பேர் பங்கேற்ற மனிதச்சங்கிலி நடைபெற்றது. அரசு கலைககல்லூரி நுழைவுவாயில் முன்பு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த தேர்தலில் சிறப்பம்சமாக 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அல்லது அவர்களின் விருப்பத்தின் பேரில் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோணா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு வரும் அனைத்து வாக்காளர்களும் முக கவசம் அணிந்து வர வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளப் பெருமக்கள் தவறாது தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்திட வேண்டும். நேர்மையான முறையில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மற்ற ஆவணங்களை காட்டி தவறாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மனிதச் சங்கிலியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தியும், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, ரவி, கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் நாகலட்சுமி மற்றும் அரச அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com