100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் நூதன விழிப்புணர்வு பிரசாரம்

100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் தாம்பூல தட்டுடன் சென்னையில் வீதி, வீதியாக வலம் வந்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் நூதன விழிப்புணர்வு பிரசாரம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 18-ந் தேதி நடக்க உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவின் மூலம் மட்டுமே வலுவான ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என்ற ஒற்றை குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இதனை அடைவதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் மட்டுமே இதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சென்னையில் பா.ஜ.க.வினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதாவது, பா.ஜ.க.வினர் தேர்தல் திருவிழா என்ற பெயரிலான அழைப்பிதழை வாக்காளர்களுக்கு வழங்கி இந்த பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருமண அழைப்பிதழ் போன்று அந்த அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

அதில், அன்புடையீர், நிகழும் மங்களகரமான ஸ்ரீவிகாரி வருடம் சித்திரை 5-ந் தேதி 18.4.2019 வியாழக்கிழமை சதுர்த்தி திதியும், ஹஸ்தம் நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் திருவிழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. இதில், வாக்காளர்களாகிய நீங்கள் தவறாமல் கலந்து கொண்டு 100 சதவீதம் வாக்களித்து சிறப்பிக்க வேண்டுகிறோம். வாக்களிப்போம், வரலாறு படைப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

மெரினா கலங்கரை விளக்கம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பா.ஜ.க. மீனவர் அணி மாநில தலைவர் சதீஷ்குமார் தலைமையில் பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க.வினர் ஒவ்வொரு வீதியாக சென்று அங்குள்ள வாக்காளர்களை சந்தித்து 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தினர்.

இந்த பிரசாரத்தில் பா.ஜ.க. மீனவர் அணி மாநில செயலாளர்கள் செம்மலர் சேகர், கொட்டிவாக்கம் மோகன், ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் முரளிதரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com