மாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1000 மாணவர்கள் குவிந்தனர் புராதன சின்னங்களை வரிசையில் சென்று கண்டுகளித்தனர்

மாமல்லபுரத்தில் நேற்று ஒரே நாளில் புதுச்சேரியை சேர்ந்த 1000 மாணவர்கள் சுற்றுலா வந்தனர். புராதன சின்னங்களை வரிசையில் சென்று கணடுகளித்து ஒழுக்கத்தை கடைபிடித்த மாணவர்களை வெளிநாட்டினர் பாராட்டினர்.
மாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1000 மாணவர்கள் குவிந்தனர் புராதன சின்னங்களை வரிசையில் சென்று கண்டுகளித்தனர்
Published on

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வந்து சென்றபிறகு சுறறுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன் மாணவர்களை மகிழ்விப்பதற்காக அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் சுற்றுலா அழைத்து செல்கின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவர்கள் மாமல்லபுரம் நோக்கி சுற்றுலா வர ஆரம்பித்துள்ளனர்.

நேற்று புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அரசு பள்ளி, தனியார் பள்ளி, உருது பள்ளி என பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1000 மாணவர்கள் ஒரே நேரத்தில் சுற்றுலா வந்ததால் மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் பள்ளி மாணவ-மாணவிகளின் தலையாக காட்சி அளித்தது.

ஆசிரியர்களுடன் பல்வேறு பள்ளி மாணவர்கள் ஓழுக்கத்துடன் வரிசையாக சென்று ஒவ்வொரு பாரம்பரிய சின்னங்களை கண்டுகளித்து மகிழ்ந்தனர். உருது பள்ளி மாணவர்கள் தங்கள் மத கோட்பாட்டை பின்பற்றும் வகையில் தலையில் குல்லா அணிந்து வரிசையாக சென்று புராதன சின்னங்களை கண்டுகளித்த காட்சி அனைவரையும் கவரும்படியாக இருந்தது.

மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி பாலன், மதன், கன்னியப்பன் உள்ளிட்ட சுற்றுலா வழிகாட்டிகள் சிலர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாமல்லபுரத்தின் வரலாற்று பெருமைகளை, எடுத்துரைத்தனர்.

குறிப்பாக வெண்ணை உருண்டைக்கல் அருகில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் வரிசையாக சென்று கண்டுகளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பயணிகள் பலர் வரிசையாக சென்று ஒழுக்கத்தை கடைபிடித்த மாணவ- மாணவிகளை பாராட்டினர். அவர்கள் மாணவ- மாணவிகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் சுற்றுலா வரும் பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் துறை சலுகை கட்டணத்தில் பார்வையாளர் கட்டணம் வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் சமூக ஆர்வலர்கள் பலர் பள்ளி மாணவர்களுக்கு மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க கட்டணமின்றி இலவச அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com