திருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - கலெக்டர் சிவன்அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும், என கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - கலெக்டர் சிவன்அருள் தகவல்
Published on

திருப்பத்தூர்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது.

கலெக்டர் சிவன் அருள் பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 16 ஆயிரம் மாணவர்கள் எழுதி உள்ளனர். இந்த மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதில் வாணியம்பாடியில் உள்ள 4 தனியார் பள்ளிகள், திருப்பத்தூரில் 3 தனியார் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அப்பள்ளி வளாகங்கள் அனைத்தும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலர்கள் மூலமாகத் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு திருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் நடத்தப்படும். ஒவ்வொரு அறையிலும் 10 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு நடக்கும் பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் விரைவில் நடக்க உள்ளது. அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் முகக் கவசம் வழங்கப்படும். தேர்வு எழுத செல்லும் முன் அவர்களுக்கு கைகளில் கிருமி நாசினி பூசப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் தற்போது தேர்வு எழுதும் அச்சம் எதும் இல்லை. ஏதாவது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டால் அவர்களுக்கு 5 மாற்று இடங்கள் தேர்வு செய்து வைத்துள்ளோம். அங்கு, அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதிகள் கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர், ஒரு கூர்ந்து ஆய்வு அலுவலர், 6 உதவி தேர்வாளர்கள், 8 ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்படுவார்கள். விடைத்தாள் திருத்த மாவட்டம் முழுவதிலும் இருந்து 15 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன், மாவட்ட கல்வி அலுவலர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்திரி, கல்வி ஆய்வாளர்கள் தாமோதரன், தனசேகரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com