1,148 மையம் அமைத்து சொட்டு மருந்து வினியோகம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 1,148 மையம் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
1,148 மையம் அமைத்து சொட்டு மருந்து வினியோகம்
Published on

விருதுநகர்,

ஒவ்வொரு வருடமும் 2 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஜனவரி மாதம் 28-ந் தேதி வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக நேற்று மாவட்டத்தில் 1,148 மையங்களில் வழங்கப்பட்டது. மொத்தம் 1,57,118 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் 46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில்வே ஸ்டேசன், பஸ் நிலையங்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில், சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என 4,580 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

விருதுநகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், கலெக்டர் சிவஞானம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ராம்கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். அப்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், நகர் நல அலுவலர் இந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் ரோட்டரி கிளப் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் டாக்டர் செல்வராஜன் கலந்து கொண்டு சொட்டு மருந்து வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com