காண்டிராக்டர் வீட்டில் நகை கொள்ளையடித்த வழக்கில் 12 பேர் கைது

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து காண்டிராக்டர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
காண்டிராக்டர் வீட்டில் நகை கொள்ளையடித்த வழக்கில் 12 பேர் கைது
Published on

225 பவுன் நகை கொள்ளை

திருவள்ளூரை அடுத்த வெள்ளகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38). சாலை காண்டிராக்டரான இவர், அ.தி.மு.க.வை சேர்ந்தவர். கடந்த 1-ந்தேதி அதிகாலை இவரது வீட்டுக்கு போலீஸ் சீருடை மற்றும் டிப்-டாப் உடையில் காரில் வந்த ஒரு பெண் உள்பட 7 பேர், தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு அவரை மிரட்டினார்கள்.

பின்னர் அவரது வீட்டில் இருந்த 225 பவுன் தங்க நகைகளையும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், வீட்டிலுள்ள மற்ற பத்திரப்பதிவு ஆவணங்களையும் தாங்கள் கொண்டு வந்த பெட்டியில் போட்டு மூடினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் இதற்குரிய ஆவணங்களை காண்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஆனால் அவர்கள் கைப்பற்றிய பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்து செல்வதற்கான எந்த ஒரு ரசீதும் கொடுக்கவில்லை. மாறாக ஒரு செல்போன் எண்ணை மட்டும் கொடுத்து விட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து பாலமுருகன் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

4 தனிப்படைகள்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

முதல்கட்டமாக குற்றவாளிகள் பாலமுருகனிடம் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இதில் தொடர்புடையவர்கள், கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

12 பேர் கைது

இதையடுத்து இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த பிரவீன்குமார் டேனியல் (55), அஸ்கர் அலி (46), சிவமுருகன் (52), நந்தகுமார் (39), பிரகாஷ் (29), வினோத்குமார் (42), கவிதா (30), பார்த்தசாரதி (45), பொள்ளாச்சியை சேர்ந்த ரெனிஷ் (46) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் திருவள்ளூரை சேர்ந்த வசந்தகுமார் (39), செந்தில் வேலன் (42) மற்றும் பெங்களூருவை சேர்ந்த வெங்கடேசன் (46) ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் பாலமுருகன் வீட்டில் நூதன முறையில் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கமிஷனர் பாராட்டு

கைதான 12 பேரும் கடந்த 20 நாட்களாக பாலமுருகன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டதுடன், கொள்ளையடிக்கும் பணத்தை சமமாக பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். தாங்கள் வகுத்த திட்டத்தின்படி 1-ந்தேதி காரில் பாலமுருகன் வீட்டுக்கு சென்று வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்களிடம் இருந்து 2 கார்களையும், நகை மற்றும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com