

ஆற்காடு,
திமிரி ஒன்றியம் மேல்நாய்க்கன்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு மத்தியஅரசின் கிராம சுவராஜ் அபியான் திட்டம் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டம், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. மூத்த குடிமகன் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குனர் சிவராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பேபிஇந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் ராமன், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சக இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகளின் கண்காட்சிகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
பின்னர் பிரதமர் நரேந்திரமோடி தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் இருந்து காணொலி காட்சியின் மூலம் பேசியதை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் பேசியதாவது.
மேல்நாய்க்கன் பாளையத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. ஆழ்துளை கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கி குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். இதற்கு முன்பு குளங்களில் இருந்து நீரை எடுத்து வந்து குடிக்க பயன்படுத்தி வந்தோம். தற்போது வீட்டிற்கே தண்ணீர் வருவதால் வெளியில் உள்ள நீர் அசுத்தமாக உள்ளது.
கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள நாகநதியில் 210 தடுப்பணை கட்டியுள்ளோம். இதனால் விவசாயத்திற்கு தேவையான நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் தடுப்பணைகள் கட்டி நீர் மட்டத்தினை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாகும். ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் காண அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சிறப்பு கிராமசபை கூட்டத்தில், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிராம ஊராட்சிக்கான வளர்ச்சி திட்டம் தயாரித்தல், கிராம ஊராட்சி நிதியினை முறையாக பயன்படுத்துவதற்கான வழிவகையினை கண்டறிதல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பல்வேறு துறைகளின் சார்பில் 66 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார்கள் சரவணன், சரஸ்வதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து நன்றி கூறினார்.