பூண்டி ஏரிக்கு 120 கன அடி நீர் வரத்து: சென்னை புறநகரில் வெளுத்து கட்டிய மழை

சென்னையின் புறநகர் பகுதிகளில் வெளுத்து கட்டிய மழையால் பூண்டி ஏரிக்கு 120 கன அடி தண்ணீர் வந்து உள்ளது.
பூண்டி ஏரிக்கு 120 கன அடி நீர் வரத்து: சென்னை புறநகரில் வெளுத்து கட்டிய மழை
Published on

சென்னை,

சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. சராசரியாக மாதம் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. வரை தண்ணீர் தேவைப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு வடகிழக்கு பருவ மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீர் ஆதாரமாக உள்ளது. பெரும்பாலும் கிருஷ்ணா நதி நீர் தான் கைகொடுத்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் ஏரிகளில் மழை நீர் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகவே சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஏரிகளுக்கு தண்ணீர் வந்து உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை புறநகர் பகுதிகளில் குறிப்பாக ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வந்து உள்ளது. குறிப்பாக பூண்டி ஏரி பகுதியில் 41 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்ததன் மூலம் வினாடிக்கு 120 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்துள்ளது. அதேபோல் சோழவரம் ஏரி பகுதியில் 4 மில்லி மீட்டரும், புழல் ஏரி பகுதியில் 9 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 91 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்துள்ளது. குடிநீருக்காக பூண்டி ஏரியில் இருந்து 95 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் பூண்டி ஏரியில் 155 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 72 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 718 மில்லியன் கன அடி (2.7 டி.எம்.சி.), செம்பரம்பாக்கத்தில் 1,972 மில்லியன் கன அடி உட்பட 4 ஏரிகளிலும் சேர்த்து 4 ஆயிரத்து 917 மில்லியன் கன (4.9 டி.எம்.சி.) அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பூண்டி ஏரியில் வெறும் 155 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மழையும், கிருஷ்ணா நதி நீரும் கைகொடுக்க தவறினால் ஏரி வறண்டு போகும் சூழ்நிலையும் உள்ளது.

இதன் மூலம் அடுத்த 5 மாத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதற்கு பிறகு வடகிழக்கு பருவ மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் முதலாவது தவணை மூலம் கிடைக்கும் தண்ணீரை தான் நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 அணைகளிலும் தண்ணீர் எடுக்க முடியாத அளவுக்கு வறண்டு வெறும் 16 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com