புதுவகை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனையில் 120 தனி படுக்கைகள் தயார்; அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

இங்கிலாந்தில் உருவாகி உள்ள புதுவகை கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 120 பிரத்யேக படுக்கைகள் தயாராக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
தனி படுக்கைகள்
தனி படுக்கைகள்
Published on

ஆய்வு

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஜீரோ டிலே வார்டில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு டாக்டர்கள் இங்கு சிகிச்சை அளித்துள்ளனர். 35 ஆயிரம் பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

120 படுக்கைகள்

கொரோனாவுக்கு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில், தற்போது 1, 600 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும், இங்கிலாந்தில் உருவாகி உள்ள புதுவகையான கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக 120 படுக்கை வசதிகளுடன் தனி வார்டு இங்கு உருவாக் கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வார்டு உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

இதுவரை இங்கிலாந்தில் இருந்து வந்த 1,438 பேரை பரிசோதித்ததில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களின் ரத்த மாதிரிகளும் புனேவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

சிகிச்சை நெறிமுறைகள்

இந்த உருமாறிய புதிய வைரசுக்கு சிகிச்சை அளிக்க எந்த ஒரு புது நெறிமுறைகளும் இல்லை. அதனால் ஏற்கனவே உள்ள நெறிமுறைகளின்படியே, இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. இங்கிலாந்தில் இளைஞர்கள் முககவசம் அணிவதை தவிர்த்ததாலேயே, அவர்களுக்கு அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

கோவேக்சின் 2 கட்ட பரிசோதனைகள் முடிவடைந்துள்ளது. அதேபோல் கோவிஷீல்ட் சோதனைகளும் முடிவடைந்துள்ளது. விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் கடைபிடித்தால், கட்டாயம் தமிழகத்தில் இன்னொரு ஊரடங்கு போடுவதற்கான சூழ்நிலை வராது. அம்மா மினி கிளினிக் கிராமப்புறங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்ட மினி கிளினிக்கில், காலை மற்றும் மாலையில் நூறு பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com