

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது. கூட்டமாக நிற்க கூடாது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலையில் தேவையின்றி சென்றதாக ஒரே நாளில் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 160 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 2 கார் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த 3 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 125 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 300 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அந்தந்த போலீஸ் நிலையங்கள் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக அண்ணா காவல் அரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் உடன் இருந்தார்.