மூணாறு நிலச்சரிவில் பலியான கயத்தாறைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3½ லட்சம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

மூணாறு நிலச்சரிவில் பலியான கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து ரூ.3½ லட்சம் வழங்கினார்.
மூணாறு நிலச்சரிவில் பலியான கயத்தாறைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3½ லட்சம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
Published on

கயத்தாறு,

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு வேலைபார்த்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரை சேர்ந்தவர்களும் பலியாகினர். அவர்களுடைய குடும்பங்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கினார்.

இதில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், ஒருவர் மட்டும் இறந்த குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம், இறுதி சடங்கில் கலந்துகொள்ள அனைத்து உறவினர்களின் போக்குவரத்து செலவுக்கு ரூ.50 ஆயிரம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரித்து வழங்கி ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர், தெற்கு மயிலோடை ஊராட்சி தலையால்நடந்தான்குளம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் முத்துலட்சுமி உயிரிழந்ததை அடுத்து, அவரது பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளித்தார். அப்போது தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறும்போது, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்கள் கிடைத்தவுடன், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கயத்தாறு பாரதிநகர் பகுதியை சேர்ந்த இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணங்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

அப்போது கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், சசிகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com